வல்லிபுர ஆழ்வார் கோயில் வரலாறு

வல்லிபுர ஆழ்வார் கோயில்,
லங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.
அமைவிடம்
வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையைக் கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.
காரணப் பெயர்
வல்லிபுரம் என்ற பெயர் இக்கிராமத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303 இலும் லம்பகர்ணர் ஆட்சி 556 இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வட மறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமராட்சி எனப்பட்டது. நூலாசிரியரான ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரியவருகிறது. அக்குழுவின் தலைவனாக வல்லியத்தேவன் என்பவன் இருந்ததாகவும் அவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது
வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கண்ணன் வளர்த்த இடமாகவும் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு வல்லிபுரம் என்ற பெயர் வரக்காரணமான பல விடயங்கள் கூறப்பட்டாலும் இப்பிரதேசத்தில் குடியேறிய மக்கள் தெலுங்கர்களாகவும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்ததாக கருதவும் இடமுண்டு.

ஆழ்வார்
ஆழ்வார் என்ற சொல் திருமாலையும் ஆழ்வான் என்ற சொல் சூரியனையும் குறித்து நிற்கிறது. வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இதன் காரணத்தாலும் வல்லிபுரநாதரை வல்லிபுர ஆழ்வார் என்று வழிபட்டிருக்கலாம். அது மாத்திரமல்லாமல் இலங்கையின் வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.
சக்கர வழிபாடு
ஸ்ரீ வல்லிவுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரம் வைத்தே பூசை நடைபெறுவது வழக்கம். சூரிய வழிபாட்டிலும் வழிபாட்டுச் சின்னமாகச் சக்கரம் இடம்பெறுகிறது. இதே வழிபாட்டுச்சின்னம் பௌத்த மதம் ஆதிக்கம் பெற்ற காலத்தில் தர்ம சக்கரமாக மாறியதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் வைணவ குடியேற்றத்தால் திருமாலின் சக்தி வாய்ந்த சக்கர ஆயுதமாக இச்சக்கரம் பூஜிக்கப்படுகிறது.
சிங்கை நகர்
இராசதானியாக விளங்கிய சிங்கை நகர் எது என்பது பற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் பல முரண்பாடுகள் உண்டு சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்துப்படி வல்லிபுரப் பிரதேசமே இராசதானியாக விளங்கிய சிங்கை நகர் ஆகும். ஆனால் அது நல்லூர் என்பது வேறு சிலருடைய கருத்தாகும். எது எப்படி என்றாலும் சிங்கை நகர் அலையெறியும் கடற்கரையோரத்தில்தான் அமைந்திருந்தது எனக்கூறப்படுகிறது.
வல்லிபுர ஆழ்வார்
வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டிடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது. 4 வரிகளைக் கொண்ட இச்சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பியகுக என இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளம் காணப்படுகிறது. எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்குரிய இடமாகக் காணப்படுகிறது.

 

 

 

Welcome to Puloly

copyright ©  2019,  Pulolycommunity.com. Developed & Service by T.Karunaharan