நல்லூர் (யாழ்ப்பாணம்)

நல்லூர் (Nallur) தற்போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்குகிறது. யாழ்நகர நடுப்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட மூன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.[1]

யாழ்ப்பாண அரசர் காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த நகர் ‘சிங்கை நகர்’ என்று அறியப்பட்டது.[சான்று தேவை] அதன் அரசன் ‘சிங்கை ஆரியன்’ என்றும் அழைக்கப்பட்டான். காலம் போக்கில், யாழ்ப்பாண அரசின் கடைசி காலத்தில் இது நல்லூர் என்று பெயர் பெற்றது.[சான்று தேவை] கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைப்பற்றிய கனகசூரிய மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478–1519) ‘சிங்கை ஆரியன்’ எனும் பட்ட பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் சிங்கை நகர் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம்.[சான்று தேவை] அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் ‘நல்லூர்’ என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது.

யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.

1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.

போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.

அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில்வீரமாகாளியம்மன் கோயில்கைலாசநாதர் கோயில்வெயிலுகந்த பிள்ளையார் கோவில்நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.

நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.

பண்டைக் கால நகரின் அமைப்பு

பண்டை நல்லூர் எவ்வாறு அமைந்திருந்தது என்று அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. சிங்கை ஆரியர்கள் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களும், ஒல்லாந்தர் காலத்தில் ( அதாவது 1658 தொடக்கம் 1796 வரை) எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை நூழும் இதில் உதவியன. மேலும் தற்போதைய நகர் அமைப்பிலும் பண்டைக் கால நகரின் அமைப்பை எம்மால் கவனிக்க முடிகின்றது.

அன்றைய நகர் முத்திரை சந்தையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. அதன் அண்மையில் பண்டை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இருந்தது (தற்போது St James’ Church இருக்கும் இடம்). 2 வீதிகள் அம்முத்திரை சந்தையில் வந்து சேரும்: வடக்கு-தெற்கு வீதி மற்றும் கழக்கு-மேற்கு வீதி. நகரை சுற்றி மதில்கள் கட்டபட்டன. நாங்கு திசைகளிலும் நாங்கு நுழைவாய்கள் அமைந்திருந்தன. அங்கு காவல் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த தகவல்கள் தமிழர் எழுதிய நூல்களில் மட்டும் இல்லாமல் போர்த்துகேயர்களாலும் குறிப்பிடபட்டுள்ளது.

கைலாய மாலை (1519–1619 இடையில் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது) யாழ்ப்பாண அரசு உருவாகிய கதையை சொல்லுகிறது. பாண்டி மழவன் யாழ்ப்பாண தமிழ் குடிகள் படும் கஷ்டத்தை கண்டு மதுரைக்கு சென்று ஓர் இளவரசனை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறான். இளவரசனின் பட்டாபிசேகம் இடம் பெறவுள்ளது. நல்லூர் நகர் எவ்வாறு அமைந்திருந்தது என்று சில குறிப்புக்கள் பின்வரும்வாறு தரப்பட்டுள்ளது:

« தாவும் மதித்த வளங்கொள் வயல் செறி நல்லூரிற் கதித்த மனை செய்ய கருதி, விதித்த ஒரு (செய்யுள் 90) நல்ல முகூர்தம் இட்டு, நாலு மதிலும் திருத்திச் சொல்லும் சுவரியற்றித் தூண் நிரைத்து, நல்ல (91) பருமத தரம் பரப்பிப் பல்கணியும் நாட்டி திரு மச்சு மேல்வீடு சேர்த்து, கருமச் (92)

சிகரம் திருத்தி திருவாயில் ஆற்றி, மிகுசித்ரம் எல்லாம் விளக்கி, நிகரற்ற (93) சுற்று நவரத்ன வகை சுற்றியழுத்தி திருத்தி பத்திசெறி சிங்கா சனம் பதித்து ஒத்த பந்தற் (94) கோல விதானம் இட்டு கொத்து முத்தின் குச்சணித்து, நாலு திக்கும் சித்ரமடம் நாட்டுவித்து, சாலும் (95)

அணிவீதி தோறும் வளர் கமுகு வாழை அணியணியாய் அங்கே அமைத்து துணிவுபெறுந் (96) தோரணங்கள் இட்டு சுதாகலச கும்பநிகர் பூரண கும்பம் பொருந்த வைத்து காரணமாய் (97)

எல்லா எழிலும் இயற்றி நிறைத்த பின்பு…»

இங்கு வர்ணிக்கப்படும் நல்லூர் மேல்மாடி கட்டிடங்களும் மாளிகைகளும் உடைய ஓர் அழகிய நகரமாகும்.

புலோலியூர் ஆலயங்கள்

Welcome to Puloly

copyright ©  2019,  Pulolycommunity.com. Developed & Service by T.Karunaharan