ஆத்தியடி பிள்ளையார் ஆலயவரலாறு

பருத்தித்துறை, புலோலி மேற்கு ஆகிய கிராமத்தில் கட்டாடிச் சீமா 3 என்று அழைக்கப்படும் ஸ்தானத்தில் பிள்ளையார் கோயில் வழிபாடு இருந்துள்ளது. இஃது அன்னியர்களாகிய போர்த்துக்கீசர், ஓல்லாந்தர் காலங்களில் இந்துக் கோயில் வழிபாடு வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட காலங்களில் அழிவுற்று இருக்கலாம் அல்லது இடிபட்டு தரைமட்டமாக்கப்பட்டிருக்கலாமென ஊகிக்கமுடிகின்றது. எம்முன்னோர்கள் அக்கால அன்னிய ஆட்சியின் கெடுபிடிகளுக்குப் பயந்து ஆலய வழிபாட்டினைக் கைவிட்டாலும், தாம் அன்றாடம் செய்யும் சமய அனுட்டானங்கள், கிரியைகள், விரத வழிபாடு முதலியவற்றை தவறாது தம் வீடுகள் தோறும் ஆட்சி அடக்கு முறையாளர்கள் அறியாவண்ணம் இரகசியமாகச் செய்து வந்துள்ளனர். கோயில் கட்டிடங்கள், செடி, கொடி புல் பூண்டால் மூடப்பட்டு விட்டது. கட்டாடிச்சீமாவென்று அழைக்கப்பட்ட இடத்தில் விநாயகர் ஆலயம் ஒன்று இருந்த அடையாளமே தெரியாமல் போய்விட்டது. இப்படியிருந்தபோதும் இக்கிராம அன்றைய சைவமக்கள் மானசீகமாக வழிபடத்தவில்லை. தம்தம் வீட்டிற்குள்ளேயே சமய அனுட்டானங்களைச் செய்து வந்தோர் பலர். அவர்ளுடைய தவப்பயனால் விநாயப் பெருமான் கனவில் தோன்றி பாழடைந்திருந்த கட்டாடிச்சீமா காணியில் இருக்கப்பெற்ற முன்னோரால் வழிபாடு செய்யப்பெற்ற இடத்தினை குறிப்பால் காட்டிநின்றார். மேலும் தம்மை வெள்ளானை வெள்ளாணில் ஆதி பல உருவங்களில் சொப்பனத்தில் காட்டியும் திருவாத்தித் திருவும் கார் வனப் பெருக்குமே தமது பழமை வாய்ந்த இருப்பிடமெனக் குறிப்பிட்டிருக்கின்றார். வால்கடைப் பரதேசியாகிய மகானது அருள்வாக்கு மூலமாக, கட்டாடிச்சீமாவென்னும் காணியில் ஆத்திமர நிழலின்கீழேயே பழமை வாய்ந்த கோயில் இருக்கப்பெற்றமையை அறிந்து விநாயகப் பெருமானை திருப்பெயர்ச்சி செய்து வாய்காற்புளியடி என்றும் புதிய ஸ்தானத்தில் (தற் காலத்தில் உள்ள இடம்) பிரதிஷ்டை செய்து வழிபடுவர்களாயினர் எம்முன்னோர். ஏறத்தாழ 1860ம் ஆண்டளவில், கட்டாடிச்சீமா வென்னும் ஸ்தானத்திலிருந்து, வாய்காற்புளியடியென்று கூறப்படும் (தற்போது கோயில் கொண்டு இருக்குமிடம்) ஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்து வழிபாடு ஆரம்பமாகியுள்ளது. கட்டாடிச்சீமாவாகிய காணியில் ஆத்திமர நிழலின் கீழ் இவ்விநாயகப் பெருமான் கண்ணுற்று கோயில் அமைக்கப்பட்டமையால் இவ்விநாயகருக்கு ஆத்தியடிப்பிள்ளையார் என்ற திருநாமமே வழங்கலாயிற்று. அப்பெயர் காலப்போக்கில் இவ்வூருக்கும் “ஆத்தியடி” என வழங்கலாயிற்று. அக்காலத்தில் சைவப் பண்பு மரவு தவறாத ஒழுக்க சீலராகவும், விநாயக வழிபாட்டில் ஈடுபாடு உள்ள பல பெரியோர் வாழ்ந்து வந்துள்ளமையை அறிகின்றோம். அவர்கள் இலை மறை காய்களாகவே இருந்துள்ளார்கள் அவர்களுள் வேலாயுத உபாத்தியாரும் ஒருவராவார் இவருடைய பெருமுயற்சியும் இக்கோயில் எழுந்தருளுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்

இன்று கற்பக்கிரகம் அமைந்துஇருக்கும் இடத்திலேயே விநாயகப்பெருமானது  மூலஸ்தானம் அன்று அமைக்கப்பெற்றது, சிறிய மண்டபமும் பனையோலையினால்  வேயப்பட்ட கூரையும் பசுவின் சாணத்தி னால் மெழுக்கிடப்பட்ட தரையுமாக இருந்துள்ளது. ஸ்ரீமத் மு. தம்பையாக்குருக்கள் அவர்களே ஆத்தியடி விநாயகக் பெருமான் பூசகராகத் தொண்டாற்றும் பாக்கியசாலியாவார். இக்குருக்களை ஐயாமுத்துக் குருக்கள் என்றும் அன்புடன் பலர் அன்று அழைப்பார்களாம் இவர் சொத்திமுத்தர் என செல்லமாக அழைக்கப்பட்ட முத்தையா குருக்களின் ஏக புதல்வர் ஆவர். இக் குருக்கள் தற்காலத்தில் பூங்கொல்லை இருக்குமிடத்தில் சிறு மண்குடிசை கட்டி குடியிருந்து மிக எளிய முறையில் நித்திய, நைமித்திய பூசைகள் செய்து வந்துள்ளார். இவர் காலத்திலேயே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலில் “கந்தபுராணப் படிப்பு, பிள்ளையார் புராணம், பிள்ளையார்கதை” முதலியனஆரம்பமாகி இன்று வழிவழிமுறையாக நடந்து வருகின்றது.

, பனையோலையால் வேயப்பட்ட கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கப்பெற்ற விநாயகப் பெருமானை இவ்வூர் விநாயக அடியார்கள் 1901ம் ஆண்டு பங்குனி மாதம் 30ம் திகதி பாலஸ்தாபனம் செய்து, அன்றைய சுப தினத்திலேயே புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள இடத்தில் அடிக்கல் நாட்டும் வைபவத்தையும் செய்துள்ளனர். தற்போது மடப்பள்ளி இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தெற்குப் பக்கமாக நின்ற பெரிய மாமரநிழலின் கீழ் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.

கோயில் புதியதிருப்பணி வேலைகள் தொடங்கப் பெற்றபோதும் திருப்பணி வேலைகள் எதிர்பார்க்கப்பட்ட அளவு நடைபெறாமையை மக்கள் உணர்ந்து 1903 அல்லது 1904ம் ஆண்டளவில் திரு சந்திரசேகர் சபாபதிப்பிள்ளை (இவரை சின்னவியார் என்றும் செல்லமாக அழைப்பார்கள்) அவர்களின் தலைமையில் கூடி கோயில் திருப்பணி வேலைகளையும், நித்திய, நைமித்திய கருமங்களைச் செய்வதற்கும், மகாசபையொன்றை நிறுவினர் அச்சபைக்கு “ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் தரும் பரிபாலன சபை” என்றும் பெயரிடப்படலாயிற்று. அன்று ஆரம்பிக்கப் பெற்ற சபை இன்று நூறு ஆண்டு வருடத்தினை (2004.03.31) நிறைவு செய்கின்றது.

ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் தரும் பரிபாலன சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர், முகாமையாளர் மற்றும் அங்கத்தவர்கள் காலத்துக்குக் காலம் பலர் செயற்பட்டாலும் சபை ஒழுங்கான முறையில் நடைபெற்று இன்று (100) நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் பெருமையுடன் விளங்குகின்றது. என்றால், அது ஆத்தியடிப் பிள்ளையாரின் அரும் பெரும் கிருபையே அன்றி வேறேதுமாக இல்லை .

முதல் முதலாக நிர்வாக தரும் பரிபாலன சபை நிறுவியபோது திரு நீலயினார் தந்தப்பர் வேற்பிள்ளை அவர்களிடமே, கோயில் , பரிபாலன அலுவல்கள், முகாமைத்துவ அலுவல்கள் யாவும் பரிபால சபையினரால் ஒப்படைக்கப்பட்டது. இப்பெரியார் 1901ம் ஆண்டு தொடக்கம் 1913ம் ஆண்டு வரை திருப்பணி வேலைகளை ஊர்மக்களின் ஒத்தாசையுடன் செய்து (1913ம் ஆண்டு) பிரமாதீச வருஷம் கார்த்திகை திங்கள் 23ம் நாள் திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேல் மீன இலக்கினமும், ரேவதி நட்சத்திரமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் மகாகும்பாபிஷேக வைபவத்தினை பூர்த்தி செய்துள்ளார் மதி அன்று முதன் முதலாகச் செய்யப்பட்ட கும்பாபிஷேக சுபமுகூர்த்தது

ஆலயத் திகதியில் இன்று வரை வருடாவருடஎம்பெருமானின்ஆலயத்தில் விசேட அபிடேகபூசை செய்யப்படுகின்றமை குறிப்பிடப்பாலதாகும். இக்கோயிலின் குருக்களாகக் பணிபுரிந்த ஸ்ரீமத் தம்பையாக் குருக்களின் சிரேஷ்ட புத்திராகிய தர்மலிங்கக் குருக்கள், முதல் கும்பாபிஷேகத்தின் பின்னர் நித்திய குருக்களாகக் தொண்டாற்றுவாராயினர். இக்காலத்திற்தான் பத்துநாள் அலங்காரத் திருவிழா, கந்தசஷ்டி, திருவெம்பா, நவராத்திரி, சிவராத்திரி முதலிய விசேட பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

திரு. கோ.கணபதிப்பிள்ளை அவர்கள் (ஜெயிலராக அரசசேவை புரிந்தவர்) திருவிழாக்கால எழுந்தருளி விக்கிரகங்களாகிய, விநாயகர், சுப்பிரமணியர், தெய்வானை, வள்ளியம்மை முதலியவற்றை செய்தவராகவும், விநாயக, சுப்பிரமணியப் பெருமான் மீது பாக்களை பாடியவருமாவார். ஸ்ரீமத் மு.தம்பையாக் குருக்கள் என்பெருமான் மேல் ஊஞ்சல் பாட்டு பாடியருளியுள்ளார்.

திரு.நீலயினார், கந்தப்பர்வேற்பிள்ளை அவர்கள் இக்கோயிலின் பரிபாலத்தினை கடந்த நூற்று ஆண்டு காலத்திற்குள் முதல் நாற்பது (40) வருடங்கள் வரை சிறப்பாக நடாத்தி தமது மூப்பு காரணமாக தமது இறைபணியை தொடர்ந்து செய்யும்படி திரு.ச.சோ.சரவணமுத்து அவர்களிடம் 1941ம் ஆண்டளவில் ஒப்படைத்து சிறிது காலத்தின்பின் இறையடியெய்தினார்.

ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் தரும் பரிபாலன சபை அக்காலத்தில் ஏதாவது அவசிய தேவையேற்படின் அன்றி ஒரு ஒழுங்கான முறையில் திட்டமிட்டபடி இயங்காத நிலையிலும் இருந்திருக்கின்றது. ஒருசில விநாயக அடியார்களே கோயில் கருமங்களை கவனிக்க வேண்டியவர்களாகவும் இருந்துள்ளனர். இச்சர்சையால் 1941.12.27ம் திகதி தருமபரிபாலன மகாசபை திரு. மு.க. கந்தையா பிறக்டர் அவர்களின் தலைமையில் கூடியது. அக்கூட்டத்தில் திரு நா.வேலுப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும், திரு.க.தம்பிராசா திரு.வே.பரஞ்சோதி ஆகிய இருவர்களையும் உபதலைவர்களாகவும், திரு.ச.சிவகுருநாதர் அவர்களை பொருளாளராகவும், திரு.ச.சோ.சரவணமுத்து அவர்களை முகாமையாளராகவும் தெரிவு செய்து. இப்பெரியோர்கள் சுபானு வருடம் பங்குனித் திங்களில் (1943ம் ஆண்டு) பாலஸ்தாபனம் செய்து பெரிதளவான கட்டிட நிர்மாண வேலைகளைச் செய்துள்ளனர். இவர்கள் காலத்திலேயே கோயில் சுற்றுமதில், பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டன. தாரண வருடம் ஆனித் திங்கள் 27ம் நாள் (1944ம் ஆண்டு) இரண்டாவது முறையாக புனராவர்த்தன மகாகும்பாபிஷேகம் மிகச் சிறந்த முறையில் சீரும் திருவும் பொலியச் ஸ்ரீ முத்துச் சுவாமிக்குருக்கள் தலைமையில் நிறைவுற்றது. 1945ம் ஆண்டு வரையுள்ள காலங்களில் விநாயகப் பெருமானுக்கு அலங்காரத் திருவிழாவே நடைபெற்று வந்துள்ளது. 1946ம் ஆண்டு திரு.ச.சோ.சரவணமுத்து அவர்கள் கொடித்தம்ப ஸ்தாபனத்தையும், ஸ்ரீ சபாபதி தேசிகர் யாகசாலை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றுச் செய்து வழமையாக வைகாசி பௌர்ணமியில் தீர்த்த உற்வசவம் நிறைவுற நிகழ்ந்த அலங்காரத் திருவிழா, அவ்வாண்டு ஆனிமாத பெளணமியில் , தீர்த்த உற்சவம் நிறைவுற்றது. முதல் கொடியேற்றத் திருவிழாவை திருவாளர்கள் நா.வேலுப்பிள்ளை , க.கு.சங்கரப்பிள்ளை வ.சிவசுந்தரம் ஆத்தியடி இளைஞர் கல்வித் தேர்ச்சிச்சங்கம்  ச.வேல்முருகு, க.வேலுப்பிள்ளை (தேர் உற்சவம்) பொ.வேலுப்பிள்ளை (தீர்த்த உற்சவம்) ஆகியோர்கள் இனிது நிறைவு செய்துள்ளனர். இப் பெரியார்களே தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் கொடியேற்றத் திருவிழாக்களைச் செய்து வந்துள்ளனர். எனினும் காலப் போக்கில் திருவிழா உபயகாரர்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1947ம் ஆண்டில் இருந்து கொடியேற்றத் திருவிழா வைகாசி மாதத்திலேயே நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இக்காலத்தில் புதிய திருப்பணி வேலைகளும் ஸ்தம்ப மண்டபமும் ஓடுகளால் அமைக்கப் பெற்றுள்ளது.

திரு.சங்கரப்பிள்ளை முருகேசு, திருமதி இலட்சுமிப்பிள்ளை இராமசாமி, திரு.த.வே.தாமோதரம், திரு நா.வேலுப்பிள்ளை , திருமதி மனோன்மணி வேலுப்பிள்ளை , திரு. ச.சோ.சரவணமுத்து, திரு.க.வேல்முருகு, திருமதி சீதேவிப்பிள்ளை குழந்தைவேலு, திரு.க.வேலுப்பிள்ளை திருமதி.அன்னபூரணம் வேலுப் பிள்ளை , திரு.ச.சிவகுருநாதர், திரு.சே.கிருஷ்ணசிங்கம் , திரு.சோ.ச.சோமசுந்தரம், திரு.ப.நாராணயசாமி, திரு.வே.கந்தையா மற்றும் பல அடியார்களின் பொருள் உதவியாலும், சரீர உதவியாலும் உள்வீதி மண்டபங்கள், வெளிமண்டபங்கள் தூண்கள், சுவர்கள், கூரை அமைத்தல், சுவர் பூசுதல் கிணற்று வேலைகள் வாய்க்கால் திருத்த வேலைகள், விநாயகப் பெருமானின், முருகப் பெருமானின் வாகனங்கள், சகடை போன்ற பணிகள் நடைபெறும் வந்துள்ளது. காலம் சென்ற திரு.சண்முகம் குழந்தைவேலு, திரு.க.வேல்முருகு ஆகியோர் அக்காலத்தில் சிவாகம விதிமுறைகளைத் தெரிந்தவர்களாய் இருந்து ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் நித்திய, நைமித்திய, விசேட திருவிழாக்கள், சைவாகம் விதிப்படி நடப்பதற்கு வழிகாட்டிகளாக இருந்து தொண்டாற்றி வந்துள்ளமை விசேடமாகக் குறிப்பிடப்பாலதாகும்.

1950ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆண்டு வரை பத்து ஆண்டுகளுக்கு மேல், ஸ்ரீலஸ்ரீ து.சிவசிதம்பரக்குருக்கள் இவ்வாலய அர்ச்சகராக சிறப்பாக தொண்டாற்றியுள்ளார். அவருடைய கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு ஆகிய சிறப்பான குணாதிசயங்களை போற்றாதாரில்லை. இவர் ஒரு சிறந்த முன்மாதிரியான குருக்களாவார்

1960ஆம் ஆண்டு புதிதாக கொடித்தம்பம் ஒன்று திரு.முருகேசு சண்முகம்பிள்ளை அவர்களின் உபசரிப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

1961ஆண்டிலிருந்து 1964ம் ஆண்டு வரை பல குருக்கள் சிறிது சிறிது காலத்துக்கு தற்காலிகமாகப் பூசை செய்தனர். அவர்களில் அயல் கிராமங்களில் உள்ள கோவில்களில் பூசகர்களாகிய ஸ்ரீலஸ்ரீ சி.சுப்பிரமணியக்குருக்கள், ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாதக்குருக்கள் ஆகியோர் பூசை செய்து கொண்டு வருவார்களாயினர்

1964ம் ஆண்டு கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடக்கம் 1984ம் ஆண்டு வரை ஸ்ரீ சுதா சிதம்பரப்பிள்ளைக்குருக்கள் சிறப்பாக பூசை செய்வாராயினர். தொடர்ச்சியாக 20 ஆண்டு காலம் வரை பூசை செய்த இக்குருக்கள் மூப்பினாலும், த சரீர ஆரோக்கிய குறைவினாலும் தமது சிரேஸ்ர புத்திரியின் துணைவராகிய அ. ஸ்ரீ ஆனந்தவிஷய மதியாபரணக் குருக்களிடம் 1985ம் ஆண்டு தைமாதம் தேன் தொடக்கம் கோயில் பூசைப்பணிகளைச் செய்யுமாறு ஓப்படைத்துள்ளார். எனினும் தமது இறுதிக்காலம் வரை மருமகனாருக்கு உதவியாக கோயில் தொண்டு செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். *

1985ம் ஆண்டிலிருந்து இன்றுவரை மதியாபரணக்குருக்கள் சிறப்புடன் நித்திய, நைமித்திய பூசைகளை மிக அன்புடனும் பயபக்தியுடனும் செய்துவருகின்றார்

பராபவ வருஷம் சித்திரைத்திங்கள் 25ம் நாள் (1966ம் ஆண்டு) விநாயகப் பெருமானின் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று திருப்பணி வேலைகள் செய்து பிலவங்க வருஷம் சித்திரைத் திங்களில் கூடிய மக நட்சத்திரத்தில் (1967.04.20) ஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் தலைமையில், விநாயக பக்தராகிய சோ.ச.சோமசுந்தரம் அவர்கள் மூன்றாவது மகா கும்பாபிஷேகத்தை சிறப்புற நடாத்தி நிறைவு செய்தது விநாயக அருளினாலாகும். 1972ஆம் ஆண்டு திரு.இ. உருத்திரா நியாயதுரந்தர் அவர்கள் புதியதோர் விநாயக எழுந்தருளி விக்கிரகம் செய்து உபசரித்துள்ளார்.

திரு.க.வேலுப்பிள்ளை அவர் மனைவி அன்னபூரணம், மகன் பாலசுப்பிரமணியம், அவர்களின் இடையறா முயற்சியாலும் தொண்டினாலும் மற்றும் விநாயக அடியார்களின் உபசரிப்பு உதவியுடன் புதிய சித்திரத்தேர் உருவாகி 29.05.1977ம் திகதி வெள்ளோட்டம் நடைபெற்று 1977ம் ஆண்டிலிருந்து விநாயகப் பெருமான் சித்திரத் தேரிலேயே வீதியுலா வரும் அருள் காட்சியை நாம் கண்டு களிக்கக் கூடியதாகவுள்ளது. மூத்தவிநாயகர் கோயிலடியைச் சேர்ந்த திரு. பரமசோதி அவர்களே இச்சித்திரத்தேரின் பிரதம சிற்பாசிரியராகும்.

துந்துபி வருஷம் சித்திரை திங்கள் 13ம் நாள் (1982ம் ஆண்டு) விநாயகப் பெருமானின் பாலஸ்தான விழா நடைபெற்றுள்ளது. புனருத்தாரண பணிகள் இக்காலத்தில் செய்ததுடன் புதிதாக சண்டேஸ்வரப் பெருமானுக்கும் திரு.ச.கனகசபை அவர்களால் கோவில் கட்டப்பட்டு அப்பெருமானை ஆவர்த்தனம் செய்துள்ளனர். சண்டேஸ்வரப் பெருமானுக்குரிய எழுந்தருளி விக்கிரகத்தை திரு சிதம்பரப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் உபகரித்துள்ளார். இதன் மேல் துந்துபி வருஷம் தைமாதம் 13ம் நாள் (26.01.1983ம்) நான்காவது தடவையாக மகாகும்பாபிஷேகம் சிவஸ்ரீ ச.மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நிறைவுற்றுள்ளது இக்குடமுழுக்கு விழாவை திரு. சண்முகநாதன் முகாமையாளராகவும், தொண்டாற்றி இனிது நிறைவேற்றியுள்ளார்.

1983ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேக பூர்த்தியின் மேல் நித்திய பூசையுடன் அதிகாலைப் பால்பூசையும் இக்கோயிலில் செய்வதற்கு திரு.சோ..சோமசுந்தரம் அவர்கள் ஆலோசனை வழங்கியதுடன் அப்பூசைக்கு மேலதிகமாக ஏற்படும் செலவுக்கு ஈடாக வட்டி வரக்கூடியதாக வங்கியில் முதலீடும் செய்துள்ளார்.

1984ம் ஆண்டளவில் கோயில் கிழக்கு திசையில் வெள்ள வாய்காலால் வீதி சேதமுறா வண்ணம் திரு. நா.செந்திவேல் அவர்கள் அணைகட்டியும் திரு.விக்கினராஜா அவர்கள் இணைப்பு பாலத்தினையும் கட்டியுள்ளார்கள் 

1985ல் திரு.க.இராமச்சந்திரன் அவர்கள் கொடித்தம்பத்திற்கு பித்தளை லோகத்தினால் கவசம் அமைத்துக்கொடுத்துள்ளார். திரு.ச.குகதாஸ் ஆ.

அவர்கள் நுனாம்பற்றை என்று அழைக்கப்படும் கோயிலுக்கு வடமேற்கே உள்ள காணியை கோயில் தருமபரிபாலன சபைக்கு குடி நிந்தமாக அளித்துள்ளார். அத்துடன் தமது பெறுப்பில் இருந்துள்ளது,

இறுதியாத்திரை வண்டிப் பராமரிப்பு அத்துடன் தொடர்புள்ள அசைவுள்ள, அசைவற்ற சொத்து முதலியனவற்றையும் கோயில் தருமபரிபாலன சபையினரிடம் கையளித்துள்ளார்.

இவ்வாண்டில் புதிதாக தருமபரிபாலன சபையின் விதியுரைகளை திருவாளர்கள் வே.க.நடராசா, வே. ஸ்ரீஸ்கந்தவேல், மு.ச.முருகேசு, ஆ.சிவபாதசுந்தரம், ஆ.குமாரசாமி ஆகியோர்கள் கொண்ட குழுவால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

திரு.ஆ.வேல்முருகு அவர்கள் ஆத்தியடிப்பிள்ளையார் கோயிலுக்குரிய காணிகளான நுளும்பற்றை, கட்டாடிச்சீமா, வாக்கால்புளியடி ஆகிய சகல அசைவற்ற சாதனங்களையும், அக்காணிக்குள் இருக்கப்பட்ட கட்டிடம் முதலியவற்றையும் சிரமதானமாகச் செய்து சபையிடம் ஒப்படைத்துள்ளார்.

திருவாளர்கள் ச.நந்தகுமார், க.விக்கினராசா அவர்கள் நீர் இறைக்கும் யந்திரம் வழங்கியுள்ளார். மடப்பள்ளிக் கிணற்றிற்கு குழாய் அடித்து நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்தும் செலவை திரு.ஆ.முருகேசு அவர்கள் பொறுப்பேற்றார்.

திரு.ச.சபாபதிப்பிள்ளை அவர்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் நீர்தாங்கி வழங்கியுள்ளார். இவற்றையெல்லாம் சிறப்பான முறையில் பொருத்தி தேவையான இடங்களுக்கு நீர் விநியோகிக்கும் வேலைகளை திரு.சி.தியாகராசா அவர்கள் சிரமதானமாகச் செய்ததுடன் முன்மண்டப முகப்புக்கு இரும்பு கேற்றும் தமது பொறுப்பில் அமைத்துள்ளார்

திரு.கோ.இராசரத்தினம் அவர்கள் கொடித்தம்ப மண்டபத்துடன் இணைந்துள்ள தரிசன மண்படத்துக்கு காகம் புகாமல் கம்பிவலை அமைத்துள்ளார். அர்த்த மண்டப வாசல் கதவுடன் இணைத்து காகம் உட்புகா வண்ணம் வலைப்பின்னல் கேற்றை திரு.கி.நடராசா அவர்கள் உபகரித்துள்ளார்.

1989ல் வசந்த மண்டப திருத்த வேலை செய்யப்பெற்று, தூபிகையும் கட்டி அபிடேகமும் செய்யப்பட்டுள்ளது. திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் வசந்த மண்டப சுருக்குக்கேற் அமைத்துக் கொடுத்தார் திருமதி.சோ.மங்களேஸ்வரி அவர்கள் புதிய மனோன்மணி அம்மன் எழுந்தருளி விக்கிரகம் வழங்கியுள்ளார். 1992.09.09ல் இங்கு நூதன பிரதிஷ்டா கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. 1992ம் ஆண்டளவில் கோயில் உள்வீதி முழுவதும் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

1993ல் திரு. த. இரத்தினம் அவர்கள் யானை வாகனமொன்று ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்தார்.

1994.11.14ல் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று பழுதடைந்து இருந்த தூபிகள், பொம்மைகள் முதலியன மேலும் செப்பனிடப்பட்டு புவவருடம் ஆவணி மாதம் 21ம் நாள் (1995.09.06) மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்காலத்திலேயே நாகதம்பிரான் சுற்றுப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டு அபிஷேகமும் செய்யப்பட்டது. இக் கும்பாபிஷேகத்தை உயர்பீடம் கிரியா கலாபமணி சிவஸ்ரீ ஸ்ரீகாந்தக்குருக்கள் சிறப்புறச் செய்து நிறைவேற்றியுள்ளர். இக்காலத்தில் தலைவராக ச.சிவசுப்பிரமணியம் அவர்களும், செயலாளராக ஆ.சோமசுந்தரம் த, அவர்களும், க.சண்முகநாதன் அவர்களும் முகாமையாளராகவும்  அளப்பெரிய தொண்டாற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்துள்ளனர்.

ஐந்தாவது மகாகும்பாபிஷேகம் நிறைவுற்று 9வருடங்களின் பின் இன்று ! 31.03.2004ம் திகதி ஆத்தியடி பிள்ளையார் கோயில்  தருமபரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்டு, நூறு வருடங்கள் பூர்த்தியாகின்றது.

ஊர்இல்லான், பெயரில்லான், உருஇல்லான் இறைவன், அப்படிப்பட்ட இறைவனுக்கு உருவம் உண்டாக்கி பல பெயர்கள் வைத்து ஊர் சொல்லி வழிபடுகின்றோம் அவ்வாறு செய்ய வேண்டியதும் வழிபாட்டுக்கு மிக அவசியமானதாகும். அவ்வாறே பல்லாண்டு என்னும் பதம் கடந்த பெருமானுக்கு நூறு ஆண்டு விழா கொண்டாட வேண்டியது வழிபாட்டுக்கு மிக மிக அவசியமாகும்.

பால், மண்பாண்டத்தில் கறந்து எடுத்தாலும், கொடுத்தாலும் பாலின் பெருமை, சிறப்பு குறைவது இல்லை . அஃது போல், சிற்றறிவினனாகிய நான் இவ்வாலயத்தின் வரலாற்றையும், அனுபவரீதியாகத் தெரிந்தவற்றையும் தருமபரிபாலன சபையின் கூட்ட அறிக்கையிலிருந்தும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்ட ஆத்தியடிப்பிள்ளையார் கோயிலின் வரலாறு மென்மையான, பயனில்லாத புன் சொற்களால் தொடுத்து எழுதப்பட்டாலும் ஆங்காங்கு தவறுகள், குறைகள் இருப்பினும், வருங்கால சந்ததியினருக்கு உபயோகமுடையதாக இருக்கும் என்றபடியாலும், சபையோர்கள், பெரியோர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களாக

Untitled-1

புலோலியூர் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது.